
புதுச்சேரி திருக்காஞ்சியில் நடைபெற்று வரும் புஷ்கரணி விழாவில் கங்கா ஆர்த்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆந்திர மாநில சுற்றுலா அமைச்சரும், நடிகையுமான ரோஜா பங்கேற்று சாமி தரிசனம் செய்தார், இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நடிகர் ரஜினி, அரசியல் வேண்டாம் என முடிவு செய்த பின்னர் அரசியல் குறித்த அவர் பேசக்கூடாது. கடவுளாகப் பார்த்த என்.டி.ஆர்-க்காக நடத்தப்பட்ட விழாவில் சந்திரபாபு நாயுடு குறித்து தெரிந்தே தவறாக ரஜினிகாந்த் பேசி உள்ளது கஷ்டமாக உள்ளது. என்.டி.ஆரை கொலை செய்ய திட்டம் போட்டவர்களை நல்லவர் என சொன்னது மட்டுமின்றி மேலே இருந்து அவர் ஆசீர்வாதம் செய்வார் என ரஜினி பேசியது மிகவும் தவறானது.
ஆந்திராவில் உள்ளவர்கள் ரஜினியை சூப்பர் ஸ்டாராகவும், நல்ல நடிகராகவும் நினைத்தனர். ஆனால், ரஜினி, இப்படி பேசியதால் என்.டி.ஆர் ரசிகர்கள் அவர் மீது கோபமாக உள்ளனர். ஆந்திர அரசியல் தெரியாமல் சந்திரபாபு நாயுடு கொடுத்த ஸ்கிரிப்டை ரஜினி படிப்பது சரியானதாக இருக்காது. ரஜினி பேசியதால் இன்று அவர் ஜீரோவாகியுள்ளார். பிற மாநில அரசியல் தெரியாமல் இருக்கும் போது, தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினி பேசியது தொடர்பாக ரஜினி அறிக்கை கொடுத்தால் நன்றாக இருக்கும்.
ஆந்திராவில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று ரோஜா நம்பிக்கை தெரிவித்தார்.