திருமண மண்டபமான திரையரங்கம்! - காதல் ஜோடிக்கு ரஜினி ரசிகர்கள் டும்..டும்..டும்
பேட்ட திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், சென்னை, தஞ்சை திரையரங்குகளில் காதல் ஜோடிகளுக்கு ரஜினி ரசிகர்கள் திருமணம் செய்து வைத்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளது. திரைப்படங்கள் வெளியான நிலையில் தியேட்டர்கள் முன்பு பட்டாசு வெடித்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நள்ளிரவில் சிறப்பு காட்சிகள் வெளியானதால் நேற்று இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கில் காதல் ஜோடிக்கு ரஜினி ரசிகர்களே திருமணம் செய்து வைத்தனர். ஐயர் மந்திரங்கள் முழங்க மூத்த ரஜினி ரசிகர்கள் தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் நடைபெற்றது. ஏராளமான ரசிகர்கள் அர்ச்சனை தூவி வாழ்த்தினர்.
இதேபோல், தஞ்சையில் உள்ள திரையரங்கு ஒன்றிலும், காதல் ஜோடிக்கு ரஜினி ரசிகர்கள் திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணங்களால், திரையங்கமே கல்யாண மண்டபமாக மாறியது.