நடிகர் ரஜினிக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்த முத்துமணி உயிரிழப்பு
நடிகர் ரஜினிகாந்த்துக்கு முதல் ரசிகர் மன்றம் ஆரம்பித்த மதுரையைச் சேர்ந்த ரசிகர் முத்துமணி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக, 45 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் புகழ்பெற துவங்கியபோதே நடிகர் ரஜினிக்கு முதன் முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர் என்ற பெருமையை பெற்றவர் மதுரையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஏ.பி. முத்துமணி (63)
இவர் நுரையீரல் தொற்றுக் காரணமாக 2020-ஆம் ஆண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களாக அனுமதிக்கப்பட்டது குறித்துக் கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் முத்துமணிக்கு போன் செய்து நலம் விசாரித்ததோடு, அவரது மனைவிக்கும் ஆறுதல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஏ.பி.முத்துமணி கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய திருமணம் சென்னையில் ரஜினிகாந்த் வீட்டில் உள்ள பூஜை அறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முத்துமணி ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி ரஜினி ரசிகர்களை ஒருங்கிணைக்க அகில இந்திய மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.