"அதிமுகவினர் காஸ்ட்ரோ, சே குவேரா, பிரபாகரன் வரலாறுகளை படிக்கணும்" - ராஜேந்திர பாலாஜி சொன்ன காரணம்!
அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அப்போது, தேசியம் மீது பற்றுள்ள கட்சியும், தேசத்தை பாதுகாக்கும் கட்சியும் கூட்டணி வைத்துள்ளதாகவும் , அதிமுக பாஜக கூட்டணி வெற்றிக்கூட்டணி எனவும் பேசியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி அனைத்து ஒன்றியங்களில் உள்ள அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாம் ஒரு தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது, "வெள்ளை மனம் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி, சில நேரங்களில் தவறுகளை சுட்டிக்காட்டி தட்டிக்கொடுக்கிறார். அதை கேட்காதவர்களை என்ன செய்ய முடியும், அவர்களைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் கட்சியின் நலனுக்கான அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார். நாட்டை பாதுகாக்கும் பாரதிய ஜனதா கட்சியோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
தேசியம் மீது பற்றுள்ள கட்சியும் தேசத்தை பாதுகாக்கும் கட்சியும் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியே வெற்றிக்கு போதுமானதுதான், இருப்பினும் ஜனவரி மாதத்திலிருந்து எதிர்பாராத பல கட்சிகள் அதிமுகவிற்கு ஆதரவு தர உள்ளது. எனவே அதிமுக பலமான கூட்டணி அமைத்து 220 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், " சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி என்ற வரலாற்றை நாம் படைக்க வேண்டும். அதற்கு களப்பணி முக்கியம். தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தால் நாம் களத்தை தவறவிட்டு விடுவோம். எனவே, நாம் ஒரு போராளிகளாக மாறி அதிமுக-வின் வெற்றிக்காக பாடுபட வேண்டும்.
மேலும், நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களான பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, பிரபாகரன் போன்றோரின் வீர வரலாறுகளைப் படியுங்கள், அவர்களின் தியாகங்களை படியுங்கள், அவர்களைப் போல அதிமுகவின் தொண்டர்களாகிய நீங்களும் அதிமுக வின் வெற்றிக்காக பாடுபட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

