தீரன் பட பாணியில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற தமிழக போலீசார்! ராஜஸ்தானில் கைதானது எப்படி?

தீரன் பட பாணியில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற தமிழக போலீசார்! ராஜஸ்தானில் கைதானது எப்படி?
தீரன் பட பாணியில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற தமிழக போலீசார்! ராஜஸ்தானில் கைதானது எப்படி?

லஞ்சம் கேட்டதாகக்கூறி தமிழக தனிப்படை போலீசாரை கைது செய்துள்ளது ராஜஸ்தான் போலீஸ். பின் நடத்திய விசாரணையில், அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான பரபரப்பான முழுவிவரம்.

ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்பதாக 12 தமிழக போலீசாரை ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து இன்று விசாரணை நடத்தியுள்ளனர். அதைத்தொடர்ந்து திருட்டு வழக்கில் நகைகளை மீட்பதற்காக சென்றபோது, தங்கள் மீது லஞ்சம் கேட்பதாக தம்பதியினர் பொய்யான புகார் அளித்துள்ளதாக பிடிப்பட்ட தமிழக போலீசார் வாக்குமூலம் அளித்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் திருச்சியில் பூட்டி இருந்த வீடுகளை கொள்ளை அடித்ததாக, 4 பேர் கொண்ட வட மாநில கும்பலொன்றை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ராமா, ரத்தன், சங்கர், ராம் பிரசாத் ஆகிய நான்கு பேர் கொண்ட அந்த கும்பல், ராஜஸ்தான் அஜ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது. இவர்கள் டிக்கெட் எடுக்காமல் ரயில் மூலம் தமிழகத்திற்கு வந்து இந்த கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய இவர்கள், ஒவ்வொரு முறை கொள்ளையடிக்கும் நகைகளையும் ராஜஸ்தானில் உள்ள சொந்த ஊரில் பதுக்கி வைத்துள்ளனர். இவ்வாறாக திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்தி 500 சவரன் நகைக்கு மேல் இவர்கள் கொள்ளையடித்திருந்தது தமிழ்நாடு போலீசார் விசாரணையில் தெரியவந்திருந்தது.

தங்கள் சொந்த ஊரில் உள்ள பன்னலால் மற்றும் சோனியா என்ற தம்பதியினர் இந்த நகைகளை வைத்திருப்பதாக கொள்ளையர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், அவற்றை மீட்பதற்காக ஆய்வாளர் மோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நகைகளை பணமாக மாற்றியதாக அத்தம்பதி கூறியதன் அடிப்படையில், பணத்தை கொடுப்பதற்கு இரண்டு நாள் தமிழக தனிப்படை போலீசாரிடம் தம்பதியினர் அவகாசம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே தனிப்படை போலீஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக சோனியா மற்றும் பன்னாலால் தம்பதி அம்மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தனர். அதில் 12 தமிழக போலீசார் தங்களை மிரட்டுவதாகவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்றால் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் அவர்கள் ராஜஸ்தான் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் நேற்று 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற போது 12 தமிழக போலீசாரை கையும் களவுமாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பிடிப்பட்ட தமிழக போலீசாரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நடந்ததை கூறியுள்ளனர். இதனையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் அந்த வழக்கு குறித்தான விளக்கத்தை அஜ்மீர் மாவட்ட போலீசார் கேட்டு பெற்றுள்ளனர். பிடிப்பட்ட தமிழக போலீசார் லஞ்சம் கேட்டது உண்மையா அல்லது நகையை மீட்க வந்துள்ளனரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே ராஜஸ்தான் போலீசார் தமிழ்நாடு போலீஸை கைது செய்த தகவல் கிடைத்து, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, ராஜஸ்தான் டிஜிபி-யுடன் பேசி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய கேட்டுள்ளார். அதன் பேரில் தமிழ்நாடு போலீசை ராஜஸ்தான் போலீசார் விடுதலை செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய ப்ரியா செய்தியாளர்களை சந்தித்தபோது, “திருச்சியில் 7 இடங்களில் கடந்த (ஜுன் - நவம்பர் -2022) மாதத்தில் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேரை காவல்துறையினர் பிடித்துள்ளனர். திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் 255 சவரன் நகை கொள்ளை போய் உள்ளது. திருச்சியில் மட்டும் 170 சவரன் கொள்ளை போனது.

இதுதொடர்பாக நகைகளை மீட்க கன்டோன்மெண்ட் உதவியாளர் கென்னடி தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் ராஜஸ்தான் விரைந்தனர். தற்பொழுது 300 கிராம் மட்டுமே அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. மீதி உள்ள நகைகளை மீட்பதற்கு காவல்துறையினர் முற்பட்டபோது, இவர்கள் பணம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ராஜஸ்தானில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் இவர்களை (திருச்சி போலீசார் 12பேரை) ராஜஸ்தான் போலீஸ் விசாரணை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளினர்.

அவர்களுக்கு உரிய ஆவணங்களை கொடுத்து அவர்கள் தற்பொழுது திருச்சி திரும்பி வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் (ரத்தன், ராம்பிரசாத், சங்கர், ராமா) கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் வட மாநிலத்தவர் 5000 பேர் உள்ளனர். முக்கியமாக வடமாநிலத்தவர் பணிபுரியும் இடங்களில் அவருடைய ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை முறையாக சேகரித்து வைக்க வேண்டும்” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com