பெரியபாண்டியனை கொன்ற கொள்ளையன் நகைக்கடைக்காரருக்கு மிரட்டல்
மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தானில் சுட்டுக்கொன்ற கொள்ளையன் நாதுராம், சென்னையில் உள்ள நகைக்கடை உரிமையாளருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளான்.
சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை 3.5 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை பிடிக்க ராஜமங்கலம் போலீசார் 5 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் தமிழக போலீசார் ராஜஸ்தான் சென்று கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க இணை ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையிலான தமிழக போலீஸ் ராஜஸ்தான் சென்றுள்ளனர்.
இந்நிலையில் ராஜஸ்தானில் காவல் கண்காணிப்பாளர் பெரியபாண்டியனை சுட்டுக்கொன்ற கொள்ளையன் நாதுராம், செல்போன் மூலம் கொளத்தூரில் உள்ள நகைக்கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்துள்ளது. நகைக்கடை உரிமையாளர் முகேஷ் குமாரை, கொள்ளையன் நாதுராம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எங்களை பிடித்துக் கொடுக்க காவல்துறையை தூண்டும் உனக்கு எங்களைப் பற்றி தெரியாது என்றும், நீ உயிரோடு இருக்கமாட்டாய் என்றும் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறான்.