4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தவருக்கு தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும் - ராஜன் செல்லப்பா

4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தவருக்கு தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும் - ராஜன் செல்லப்பா
4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தவருக்கு தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும் - ராஜன் செல்லப்பா

4 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்தவருக்கு தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேட்டியளித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவிற்காக ஜானகி பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்தது போல் விட்டுக்கொடுத்தால் கட்சி சிறப்பாக இருக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அவர் பேசியுள்ளார். 

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’’தற்போது உள்ள விதியின் காரணமாக அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. விதியை மாற்றினால்தான் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என அதிமுக தொண்டர்கள் நம்புகிறார்கள். நல்ல தலைமை வரவேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனை நிறைவேற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.

ஒற்றை தலைமை என்ற விவாதம் எழுந்து உள்ளது. அதனால் அதற்கு முடிவு ஏற்பட பொதுக் குழுவில் வாய்ப்புள்ளது. சட்டத்தில் மாறுதல் செய்வது தவறில்லை. சட்ட திருத்தம் செய்வது புதிதல்ல. மாவட்டச் செயலாளர் 90சதவீதம் பேர் ஒற்றை தலைமையை எதிர்பார்க்கின்றனர். நல்ல தலைமையை உருவாக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிளைக் கழகச் செயலாளர் தொண்டர்களின் எண்ணங்களை நிறைவேற்றப் போகிறோம். அவர்களின் நல்ல கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

2019 ஆம் ஆண்டே ஒற்றைத் தலைமையின் கீழ் வரவேண்டும் என நான் கூறினேன். தற்போது பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுப்பதை ஏற்று ஒற்றுமையாக அனைவரும் செயல்பட வேண்டும். அது கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் சரி. ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிகாரப்பூர்வமான கூட்டம் இல்லை. அதற்கு தனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. ஜானகி பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தது போல் திறமையானவர்களுக்கு விட்டுக்கொடுத்தால் கட்சி சிறப்பாக இருக்கும்.

எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதா தனிக் கட்சி ஆரம்பித்தபோது சேவல் சின்னத்தில் போட்டியிட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சியை சிறப்பாக நடத்தி, கட்சியை கட்டிக் காப்பாற்றியவருக்கு மற்றொருவர் தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும்’’ என எடப்பாடி பழனிசாமிக்கு மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளார் ராஜன் செல்லப்பா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com