கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுத் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர். இருப்பினும் பொதுத் தேர்வு இல்லாத மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த விடுமுறை பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் வழக்கம்போல் தேர்வு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.