தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்பட சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னையில் நேற்று இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், கோடம்பாக்கம், வடபழனி, அசோக் நகர், விருகம்பாக்கம், ஆலந்தூர், அண்ணா சாலை, அண்ணா நகர், வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூர், தரமணி ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது. ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட சில பகுதிகளில் அதிகாலை வரை விட்டுவிட்டு மழை பெய்தது. இந்த மழை காரணமாக நகர் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் இரவில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பாதிரி, பிருதூர், சென்னாவரம், அம்மையப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.
கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை லாலாப்பேட்டை தண்ணீர் பள்ளி மேட்டு, மருதூர், குமாரமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி-மின்னலுடன் மழை பெய்தது.