கனமழை காரணமாக டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் இயல்புநிலை பாதிப்பு!

கனமழை காரணமாக டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் இயல்புநிலை பாதிப்பு!

கனமழை காரணமாக டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் இயல்புநிலை பாதிப்பு!
Published on

கனமழை காரணமாக டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், புரெவி புயல் வலுவிழந்தவிட்டபோதிலும், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாளாக கனமழை பெய்து வருகிறது. கூப்பாச்சிக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. மூன்றரை அடிக்கு மேல் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மன்னார்குடி, வீரன்வயல், நரிக்குறவர் காலனி போன்ற இடங்களில் அதிகளவில் மழைநீர் தேங்கியுள்ளது. குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 219 வீடுகள் மழையால் சேதமடைந்துவிட்டன. 29 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. மழைநீரை அப்புறப்படுத்துமாறு பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கனமழையால் நாகூர் தர்கா குள சுற்றுச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் உள்ளிட்ட 7 கிராமங்களில் உப்பளங்களில் 5 அடி வரை மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக உப்பளத் தொழிலாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

கனமழை காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்ட கரும்பு, நெற்பயிர்கள் வீணாகின. ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு, 100 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிவிட்டதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை அருகே செந்தலைவயல் பகுதியில் 20க்கு மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அங்கு வசிப்போர் மாற்று இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இம்மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்றால் சூரக்கோட்டை, வாழமரக்கோட்டை, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் கரும்புகள் சாய்ந்தன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெய்து வரும் மழையால், இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். பூம்புகாரைச் சுற்றிலும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், படகுகள் மூலமே வெளியே சென்று வருகின்றனர். மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றுக் கரையைத் தாண்டி வெள்ளநீர் கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இதே போன்று, சந்திரப்பாடி மீனவ குடியிருப்புகள் கடல்நீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பிரசித்திபெற்ற மயிரநாதர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் 5 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால், அங்கு வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். விழுப்புரம் மாவட்டம் வானூரில் சாலை சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் முக்கூடல் அருகே ஏரியின் மதகு உடைந்து குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. உடைந்த மதகுகளை சீரமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com