குளிர்ச்சியான தமிழ்நாடு.. பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கொட்டிய மழை

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மார்ச் மாத இறுதியில் நிலவிய வானிலைக்கும், இப்போது நிலவும் வானிலைக்கும் முற்றிலும் மாறுபட்ட சூழல் காணப்படுகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டைpt web

திருச்சி மாநகரில் சத்திரம் பேருந்து நிலையம், மலைக்கோட்டை, இபி ரோடு, காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாலைநேரத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது.

இதேபோல, லால்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை கொட்டியது. கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடியது. திருச்சி- லால்குடி சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் தண்ணீர் குளம்போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

சேலத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவியது. மாவட்டம் முழுவதும் பரவலாக கடந்த ஒரு வார காலமாக மதிய நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடுங்கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

சேலம் டவுன் அம்மாபேட்டை நான்கு ரோடு 5 ரோடு ஜங்ஷன், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, திருவாக்கவுண்டனூர் பைபாஸ் உள்ளிட்ட பகுதியில் மாநகர் முழுவதும் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் பகல் நேரத்தில் லேசான சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.

இதேபோல, சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது. ஓமலூர், தாரமங்கலம் நகர, வட்டார பகுதிகளில் மாலையில் இருந்து விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்றாவது நாளாக மழை பெய்தது. ஒருமணிநேரத்திற்கு மேலாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கியது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் , தலைஞாயிறு செம்போடை, கோடியக்கரை உள்ளிட்ட இடங்களில் ஒருமணிநேரம் வரை மழை கொட்டியது. கோடை மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை மற்றும் கிரிவலப் பாதை, அடி அண்ணாமலை, வேங்கிக்கால், நல்லவன்பாளையம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரமாக பரவலாக மழை பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரவலாக மழை பெய்தது. இதேபோல் மழை மேலும் சில நாட்களுக்கு பெய்தால் கருகும் பயிர்களை காப்பாற்றுவதோடு, கோடை சாகுபடியையும் நம்பிக்கையோடு தொடங்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு அருகே தொடர்ந்து ஒரு மணிநேரமாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com