ஆந்திராவிற்கு நகர்ந்தது தென்மேற்கு பருவழை - தமிழகத்தில் வெப்பநிலை குறையும்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த 8ஆம் தேதி கேரளா மற்றும் தென்தமிழகப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இதையடுத்து உருவாகிய வாயு புயல் காரணமாக பருவமழை வடக்கு நோக்கி நகர்வது தடைபட்டது. இதனால் தமிழகத்தில் அனல் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராயல்சீமா மற்றும் ஆந்திர கடற்கரைப் பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை நகர்ந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் படிப்படியாக வெப்பநிலை குறையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அத்துடன் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல் இதுவரையிலான நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை 37 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.