தென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை - வானிலை மையம்
வடகிழக்குப் பருவமழை காலத்தில் டிசம்பர் வரையில், சென்னையில் 17 சதவிகிதம் குறைவாக மழை பதிவாகி உள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், குமரிகடல் பகுதியில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச்செல்ல வேண்டாம் என்றும் கூறினார்.
அவர் கொடுத்த வானிலை மைய தகவல்படி, இந்த சீசனைப் பொறுத்தவரை குறைவாக மழை பொழிவு பதிவான இடங்களில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. அங்கு 33 சதவிகிதம் அளவுக்கு மழை குறைவாக பதிவாகி இருக்கிறது. அடுத்ததாக பெரம்பலூரில் 28 சதவிகிதமும் வேலூரில் 26 சதவிகிதமும் குறைவான அளவு மழை பொழிந்துள்ளது. மதுரையில் 24 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை 17 சதவிகிதம் குறைவாக இருந்தாலும், இது இயல்பை ஒட்டிய அளவே என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக வடகிழக்குப் பருவ மழையை பொறுத்தவரை 44 சென்டிமீட்டர் மழை கிடைக்க வேண்டும், ஆனால், 45 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கிடைத்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.