அதிகாலை முதல் மீண்டும் மழை: தேர்வு ஒத்திவைப்பு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழையால் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, விழுப்புரம் மற்றும் நாகை மாவட்டம் சீர்காழி, பூம்புகார், தரங்கம்பாடி, கொள்ளிடம், மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல்- சைதாப்பேட்டை இடையே மெட்ரோ சுரங்கப்பாதை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். திட்டமிட்டபடி அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் இன்று நடைபெறும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். கனமழையால் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.