\
வடகிழக்கு பருவமழை தீவிரம்; கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தீவிரம்; கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தீவிரம்; கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Published on

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் முதல் வடதமிழகம் வரை நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், புதுச்சேரி, நாகை, மயிலாடுதுறை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவெளிவிட்டு மழை தொடரும் என்றும் நகரின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. கடலூர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகாலை முதல் நாகர்கோவில், சுசீந்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் முழுவதுமாக தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழையால் மானாவரி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com