தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், வேலூரில் சாண எருவுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கடந்த 16-ம் தேதி 17 சென்டி மீட்டரும், 17 ஆம் தேதி ஆலங்காயத்தில் 16 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, ஊட்டல் பகுதிகளில் கானாற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், பேர்ணாம்பட் அருகே சுரேஷ் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதில் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 6,500 கோழிக்குஞ்சுகள் வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தன. இந்தத் தகவலை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உறுதி செய்துள்ளார்.
ஒடுக்கத்தூர் அடுத்த கே.ஜி.ஏரியூர் கொல்லைமேடு பகுதியில் வசிக்கும் வேலு என்பவருக்கு சொந்தமான நிலத்தில், சாண எருவுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி அவரது இரு குழந்தைகள் பிரித்திகா, ஹரினி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
வாணியம்பாடியில் கரிமா பாத் பகுதியைச் சேர்ந்த அன்வர் பாஷா என்பவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், உறங்கிக் கொண்டிருந்த அவரது தாய் மற்றும் 3 மகள்கள் படுகாயமடைந்தனர். அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.