சென்னையில் நேற்று இரவு விடிய விடிய இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை இன்றும் தொடரும் எனக் கூறப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்கியிருக்கும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழக, கேரள எல்லைப்பகுதிகளான குமுளி, தேக்கடி, முல்லைப்பெரியாறு அணை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவ்வழியாக சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை, கழுகூர், சின்னையம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் மக்கள் சிரமத்திற்கு ஆளாயினர். விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை, பாலையம்பட்டி, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மழை பெய்ததால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. புதுச்சேரியில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள்.
சென்னையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.