உருவாகிறது புதிய புயல்?: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் கேரளா, தெற்கு உள் கர்நாடகா, ஆந்திராவின் ராயலசீமா பகுதிகளிலும் தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் தெரிவித்தது. தீபாவளிக்கு முன்பாக கூட சில இடங்களில் மழை பெய்தது. ஆனால், சமீப நாட்களாக கனமழை பதிவாகவில்லை.
இந்நிலையில் வங்ககடலில் சென்னையில் இருந்து ஆயிரத்து 55 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு - தென்கிழக்கு திசையிலும், நெல்லூருக்கு ஆயிரத்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேற்கு வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், 13 ஆம் தேதி அதிதீவிர புயலாக வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் வலுவடைந்தால் அதற்கு கஜா புயல் என பெயர் வைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் வலுவிழந்தாலும் வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தெற்கு கேரளா, கன்னியாகுமரி, மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளிலும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.