டிசம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்

டிசம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்
டிசம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வுமையம்

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நவம்பரில் மிக கனமழை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேநேரத்தில், டிசம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

நாடெங்கும் கடந்த நவம்பர் மாதத்தில் 11 அதிதீவிர கனமழை பொழிவுகளும் 168 மிக கன மழை பொழிவுகளும் 645 கன மழை பொழிவுகளும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக தென்னிந்தியா மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

நவம்பரில் 20 சென்டிமீட்டருக்கு அதிகமாக 11 மிக அதி கனமழைப்பொழிவுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில், நவம்பரில் 160 சதவிகிதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக நவம்பரில் 2.4 என்ற சராசரி அளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுகள் உருவாகும் நிலையில், இந்த ஆண்டு 5 குறைந்த காற்றழுத்தத் தாழ்வுகள் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நவம்பரில் இயல்பான மழை அளவான 8.95 சென்டிமீட்டரை விட 160 சதவிகிதம் அதிகமாக 23.27 சென்டிமீட்டர் மழை இந்த ஆண்டு பதிவாகி உள்ளது. 1901 ஆம் ஆண்டுக்குப்பிறகு நவம்பர் மாதத்தின் மிக அதிக மழை பதிவாக இது கருதப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இச்சூழலில், தென்னிந்தியாவில் டிசம்பர் மாத மழைப்பொழிவு இயல்பைவிட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆந்திரா, ராயலசீமா, தமிழகம், புதுச்சேரி, தெற்கு உள் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இடங்களில் இயல்பை விட அதிக மழை பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இயல்பை விட அதிகமாக 132 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்திய வானிலை மையம் கணிப்பை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com