வெப்பச் சலனத்தால் 2 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனத்தால் அடுத்த 2 தினங்களுக்கு தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரங்கள் தொடர்பாக செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன், அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாக கூறினார். அது இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனால் மீனவர்கள், அந்தமான் கடல் பகுதிக்கும், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். அத்துடன் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்தார். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் புவியரசன் கூறினார்.