Rain Alert : உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும், வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம் புயலாக மாறும் எனவுயம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கிய நிலையில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்திருந்தது. ஆனால், நவம்பர் மாதத்தின் முதல் சில நாட்களாக சென்னை மற்றும் டெல்டாவின் பல மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில்தான், கடந்த வாரம் முதல் தமிழகத்தில் கணிசமாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மழை நிலவரம் குறித்து சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நவம்பர் மாதம் நடுப்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களின் பல இடங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இப்போது லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய கேரள கடற்கரைகளில் நீடித்து வருகிறது.. இதனால், மத்திய தமிழகம் மற்றும் வங்காள விரிகுடாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது" எனத் தெரிவித்து இருக்கிறார்.
இத்தகைய சூழலில்தான் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக ஹேமச்சந்தர் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், "இன்று மத்திய தமிழகம், குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதில், மத்திய உள் மாவட்டங்களான திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் எனவும் ஹேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தென் தமிழகத்தை பொறுத்தவரை திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தென் தமிழகத்தில் தொடர்ந்து, மழை பெய்யும் என்றும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்றிரவு மற்றும் நாளை அதிகாலை வரை மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நவம்பர் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் வரும் 23, 24 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
வட தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும். கடலோர மாவட்டங்கள் முழுவதும் மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்..
முன்னதாக, 22ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம் வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் அறிவிவித்திருக்கிறது. தொடர்ந்து, வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

