சென்னையில் தி.நகர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக நவம்பர் 2ஆம் தேதி 6 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை சென்னை மக்களை மிரட்டியது. இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக சொல்லும்படியாக மழை பெய்யவில்லை. இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அவ்வவ்போது வெயிலும் அடித்தது.
இந்த நிலையில், சென்னையில் அண்ணாநகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, ராயபுரம், ஆதம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, நுங்கம்பாக்கம், சவுகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்துள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், மாங்காடு, குன்றத்தூர், மதுரவாயல், போரூர் போன்ற பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல், சன்னாநல்லூர், பேரளம், திருத்துறைப்பூண்டியில் மழை பெய்துள்ளது.