முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் பியூஷ் கோயல்?
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ்கோயல் சென்னை வந்துள்ளார். இவர் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக உள்ளார். சென்னை வந்த அவரை தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை இன்று இரவு அவர் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பு நடைபெறுவது உறுதி என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பேட்டியளித்திருந்த பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ், பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகலாம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பியூஷ் கோயல் முதலமைச்சர் பழனிசாமியை சந்திப்பதாக தகவல் வெளியாகிவுள்ளதால், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தச் சந்திப்பு நடைபெறலாம் எனப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருக்கலாம் எனப்படுகிறது.