ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகை

ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகை
ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகை

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகிறார். இதனையொட்டி பாதுகாப்பு பலப்‌படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கிட்டத்தட்ட கூட்டணியை அறிவித்துவிட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக், சிபிஐ ,சிபிஎம் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு புதுச்சேரியில் ஒரு தொகுதி, தமிழகத்தில் 9 தொகுதிகள் என 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகிறார். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் நாளை பிற்பகல் 3 மணியளவில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறப்புரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ராகுல்காந்தி வருவதால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com