ஒரே மேடையேறாத ராகுல்-ஸ்டாலின்.. பரபரப்பாகியுள்ள தேர்தல் பரப்புரை!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறது. அதன்படி திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பொன்னேரி, சோளிங்கர், துறையூர் ஆகிய 3 தொகுதிகளில் இன்று பரப்புரை செய்தார். ஆனால், கூட்டணியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்யாதது பல்வேறு விவாதங்களுக்கு வழிவகை செய்துள்ளது.
இதற்கு முன்பு ஏப்ரல் 6-ம் தேதி புதுச்சேரியில் ராகுல் பிரச்சாரம் செய்த அதே நாளில் முதல்வர் ஸ்டாலினும் அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இருவரும் ஒன்றாக பரப்புரை செய்யவில்லை. ஒன்றாக சந்தித்துக்கொள்ளவும் இல்லை. அதேவேளையில், கூட்டணி ஒப்பந்தத்தை மீறி திமுகவை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ராகுல்காந்தி சந்தித்தது பேசுபொருளாகியது.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வந்த ராகுல்காந்தி காலையில் பொன்னேரி கூட்டத்தில் 27 நிமிடங்கள் பேசியபோதும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெயரை சொல்லாமல் தவிர்த்தது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அதன் பிறகான கூட்டங்களில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடியால் மு.க ஸ்டாலினை பணிய வைக்க முடியாது என்று புகழாரம் சூட்டினார். இது திமுக-காங்கிரஸ் இடையே இன்னும் இணக்கமான சூழல் ஏற்படவில்லையோ என்ற பார்வையில் பார்க்கப்படுகிறது.

