ராதாபுரம் தொகுதி.. மறுவாக்கு எண்ணிக்கையின் நடைமுறைகள்..!
ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான மறுவாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ள நிலையில், அதற்கான நடைமுறைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
2016 தேர்தல் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடைபெற்றதாகக் கூறி, திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கின்பேரில், அந்த வாக்குகளை மீண்டும் எண்ணும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நூலக கட்டடத்தின் கூட்ட அரங்கில் இன்று மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதற்காக ராதாபுரத்தில் பதிவான தபால் வாக்குகளும், வாக்குப்பதிவின்போது 19, 20 மற்றும் 21 ஆகிய சுற்றுகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் உயர்நீதிமன்றத் தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்கப்படும்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய்த் துறையை சேர்ந்த 24 அலுவலர்கள் வாக்குகளை எண்ண உள்ளனர். வழக்கு தொடர்ந்த திமுக வேட்பாளர் அப்பாவு தரப்பில் ஒருவரும், அதிமுக வேட்பாளர் இன்பதுரை தரப்பில் ஒருவரும் அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணுவதை உயர்நீதிமன்ற பதிவாளர் தரப்பில் ஒருவரும், தேர்தல் ஆணையம் தரப்பில் ஒருவரும், கண்காணிப்பர்.
காலை 11.30 மணி அளவில் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கும். வழக்கமான வாக்கு எண்ணிக்கையில் பின்பற்றப்படும் நடைமுறையைப் போன்றே, மறுவாக்கு எண்ணிக்கையிலும் தபால் வாக்குகளே முதலில் எண்ணப்படும். அதன்படி, ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் பதிவாகியிருந்த 1,508 தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதையடுத்து கடைசி 3 சுற்றுகளில் பயன்படுத்தப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகள் எண்ணப்படும்.
இறுதியாக வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் விவரம் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்படும். இதைக் கொண்டு இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும். இதன் பின்பு அதிமுகவின் இன்பதுரை ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக நீடிப்பாரா? அல்லது திமுகவின் அப்பாவு புதிய எம்எல்ஏவாக அறிவிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.