ராதாபுரம் அப்பாவு தேர்தல் வழக்கு மார்ச் 23-க்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

ராதாபுரம் அப்பாவு தேர்தல் வழக்கு மார்ச் 23-க்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?
ராதாபுரம் அப்பாவு தேர்தல் வழக்கு மார்ச் 23-க்கு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2016 ஆம் ஆண்டு நடந்த நெல்லை மாவட்டம் ராதாபுரம் தேர்தலில், திமுகவின் அப்பாவு, அதிமுகவை சேர்ந்த இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். நேற்று விசாரணைக்கு வந்த இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அதிமுக வேட்பாளர் இன்பதுரையை எதிர்த்து அப்பாவு தொடர்ந்த வழக்கில், 203 தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை எனவும், சில சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளில் முறைகேடு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 19,20,21 ஆம் சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிடப்பட்டது. இதன்படி எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவுகளை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கின் விசாரணை மார்ச் 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

நேற்றைய (மார்ச் 16) விசாரணையின்போது உத்தரவிட்ட நீதிபதிகள் “நாங்கள் சீலிடப்பட்ட கவர்களை திறந்து 203 தபால் வாக்குகளை எண்ணினோம். இதில் 153 வாக்குகள் அப்பாவுக்கும், 1 வாக்கு இன்பதுரைக்கும், 44 வாக்குகள் செல்லாத வாக்குகளாகவும் உள்ளன. இந்த வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பாட்டால் அப்பாவு வெற்றிபெற்றவராகிறார், நிராகரிக்கப்பட்டால் இன்பதுரை வெற்றிபெறுவார்.

ஆனால், இந்த தபால் வாக்குகள் உரிய கெசட்டடு அலுவலரின் முத்திரையை பெறவில்லை என்று குற்றச்சாட்டை மனுதாரர் எழுப்பியுள்ளார். அதன்படி, தலைமை ஆசிரியர்கள் கெசட்டடு அதிகாரிகளா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.  இதுபற்றி விசாரிக்க இன்று நேரம் இல்லை, எனவே இது தொடர்பான இரண்டு பக்க சுருக்கமான அறிக்கையை வரும் 23 ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

வழக்கு விவரம்:

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69, 90‌ வாக்குகளுடன் வெற்றி பெற்‌றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இன்பதுரை வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வாக்குகளும் எண்ணப்பட்டன.

இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர் இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு மார்ச் 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது தான் உச்சநீதிமன்றம் இந்த முக்கியமான குறிப்புகளை தம்முடைய உத்தரவில் தெரிவித்து இருந்தது.

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, ராதாபுரம் தொகுதியில் அப்பாவு மீண்டும் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாக அவர் தொடர்ந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com