குவாரி உரிமம் அனுமதி: விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என நீதிமன்றம் கேள்வி

குவாரி உரிமம் அனுமதி: விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என நீதிமன்றம் கேள்வி

குவாரி உரிமம் அனுமதி: விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என நீதிமன்றம் கேள்வி
Published on

கனிம வள கொள்ளையை பொறுத்தவரை திருட்டு நடைபெற்ற பின்பு அபராதம் விதிப்பதா? இல்லை திருட்டு நடைபெறாமல் பார்த்துக் கொள்வதா? என மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவிலுள்ள சொடையூர் கிராம மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். வைகை ஆற்றில் இருந்து சொடையூர் கண்மாயில் நிறம்பும் தண்ணீரை வைத்தே இப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது..

இந்நிலையில், இதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் 2018ஆம் ஆண்டு சொடையூர் கண்மாய் பகுதியில் குவாரி நடத்துவதற்கு போலியான ஆவணங்களை வைத்து அனுமதி பெற்று கிராவல் மண் எடுத்து வந்தார். இதனை அப்போது இருந்த கூடுதல் ஆட்சியர் ஆய்வு செய்து இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி குவாரி நடத்துவதற்கான உரிமத்தை ரத்து செய்தார்.

இதையடுத்து தற்போது 2020 ஆகஸ்ட் முதல் 2021 ஆகஸ்ட் வரை ஜெயப்பிரகாஷ், மதுரையை சேர்ந்த வினோத்குமார் என்பவரது பெயரில் குவாரி உரிமம் பெற்று சொடையூர் கண்மாய் பகுதியில் கிராவல் மண் எடுத்து வருகிறார். குவாரி நடைபெறும் இடத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. பெரிய கனரக வாகனங்கள் மூலம் அப்பகுதியில் கிராவல் மண் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. மேலும் சொடையூர் கண்மாய் பாதிப்படைவதுடன் இப்பகுதியில் விவசாயம் செய்யும் மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குவாரி நடைபெறும் இடத்தை வழக்கறிஞர் ஆணையத்தை நியமித்து ஆய்வு செய்யவும், குவாரி நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். மேலும் சட்டவிரோதமாக குவாரி உரிமம் வழங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு கனிம வள கொள்ளையை பொருத்தவரை திருட்டு நடைபெற்ற பின்பு அபராதம் விதிப்பதா? இல்லை திருட்டு நடைபெறாமல் பார்த்துக் கொள்வதா? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, குவாரி நடத்துவதற்கான 21 பொது விதிகளும், அனுமதி வழங்குவதற்கான 4 விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு உள்ளனவா? என்பது குறித்தும், சட்டவிரோதமாக கனிமவள கொள்ளை நடைபெறுகிறதா? என்பது குறித்தும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து 3 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். மேலும் ஆட்சியரின் அறிக்கையின்படி சட்ட விரோத செயல்பாடுகள் இருந்தால் கனிம வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com