புள்ளிமானை சுற்றிய மலைப்பாம்பு - வேடிக்கை பார்க்க குவிந்த மக்கள்
தருமபுரியில் மலைப்பாம்பு ஒன்று புள்ளிமானை விழுங்க முயற்சித்த சம்பவத்தை ஏராளமான மக்கள் வேடிக்கை பார்த்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மொரப்பூர் காப்புக் காட்டில் மயில், புள்ளி மான், காட்டெருமை, மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. அரூர் அடுத்த அண்ணாமலைபட்டி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலத்தில், காலை மேய்ச்சலுக்கு வந்த புள்ளிமானை, திடீரென மலைப்பாம்பு பிடித்து உடல் முழுவதும் சுற்றிக் கொண்டுள்ளது. இதனால் புள்ளிமான், பாம்பிடம் இருந்து தப்பிக்க போராடி அலறியுள்ளது. இதனை அறிந்த தேவந்திரன் என்ற விவசாயி காட்டுப்பகுதி சென்று பார்த்துள்ளார். அங்கு ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று மானைப் பிடித்துத் தன் உடலில் சுற்றிக்கொண்டு விழுங்க தொடங்கியுள்ளது.
இதையடுத்து மொரப்பூர் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வருவதற்குள், மலை பாம்பு மானை விழுங்கும் செய்தி அருகிலுள்ள கிராமங்களுக்கு பரவியது. இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் வேடிக்கை பார்க்க குவிந்தனர். பொதுமக்களின் சத்தத்தை கேட்ட மலைபாம்பு மானை தனது இறுகிய பிடியிலிருந்து விடுவித்தது. இருப்பினும் மலைப்பாம்பின் பிடியில் இருந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் மலைப் பாம்பு பிடிக்கும் முயற்சியை வனத்துறையினர் எடுக்கவில்லை. ஆனால் கிராம மக்கள் மலைப் பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.