பெயர்ப்பலகையில் இப்போதும் பொதுப்பணித்துறை அமைச்சர்தான்

பெயர்ப்பலகையில் இப்போதும் பொதுப்பணித்துறை அமைச்சர்தான்

பெயர்ப்பலகையில் இப்போதும் பொதுப்பணித்துறை அமைச்சர்தான்
Published on

அரசியல் புயல் மையம் கொண்டிருக்கும் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் இல்லம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் எப்போதும் அமைதியாகக் காட்சியளிக்கும் முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் இல்லம் கடந்த சில நாள்களாகவே சுற்றுலாத் தலம் போல மாறியிருக்கிறது.

முதல்வரைக் காண்பதற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் அவரது இல்லத்துக்கு வந்து செல்கிறார்கள். முதல்வருடன் கைகுலுக்குகிறார்கள். பலர் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள். ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், பொதுமக்கள் வந்து செல்வதற்கு எந்தக் கெடுபிடியும் அங்கு இல்லை.

முதல்வர் இல்லத்துக்கு உள்ளேயே இருசக்கர வாகனங்களில் டீ விற்பவர்கள்கூட வந்து செல்ல முடிகிறது. நொறுக்குத் தீனிகள் விற்கும் சிறு கடைகள் முளைத்திருக்கின்றன. ஜெயலலிதா, பன்னீர்செல்வம் ஆகியோரது புகைப்படங்களைக் கொண்ட பொருள்கள் விற்கப்படுகின்றன. பன்னீர் செல்வம் தொடர்ந்து முதல்வராக நீடித்திருக்க வேண்டும் எனக் கோரும் சுவரொட்டிகள் முதல்வர் இல்ல வளாகத்தின் சுவர்களை ஆக்கிரமித்திருக்கின்றன. அதிகாலையில் இருந்து இரவு வரை பொதுமக்கள் வருவதால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

நிழலுக்காக பந்தல் போடப்பட்டிருக்கிறது. தேவையான அளவுக்கு அரை லிட்டர் குடிநீர் பாட்டில்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. நண்பகல் நேரத்தில் அனைவருக்கும் உணவு வழங்கப்படுகிறது. 50-க்கும் மேற்பட்ட ஊடகங்களின் கேமராக்களும், தொழில்நுட்ப உபகரணங்களும் முதலமைச்சரின் இல்லத்தை எப்போதும் படம்பிடித்துக் கொண்டிருக்கின்றன. யாராவது பிரபலங்கள் வரும்போது ஒலிபெருக்கிகள் பரபரப்பாகின்றன.

பெரும்பாலான நேரங்களில் அமைதியாக மக்களைச் சந்திக்கும் முதலமைச்சர், அவ்வப்போது இல்லத்துக்குள் சென்று ஆலோசனை நடத்துகிறார். இந்த விவகாரங்களையெல்லாம் கவனிப்பதற்காக, முதல்வருக்கு நெருக்கமான குழு ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது.

முதல் முறையாக முதல்வர் வீட்டுக்கு வருபவர்கள் சற்று புருவத்தை உயர்த்துவார்கள். ஏனென்றால், மூன்று முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தாலும், பன்னீர்செல்வம் வீட்டுப் பெயர்ப்பலைகை அவரை இன்னமும் பொதுப்பணித்துறை அமைச்சர் என்றே கூறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com