'உழவர் களத்தில் ஒரு நாள்'... உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யலாம்..!
தமிழகத்தில் நிலவும் வறட்சி குறித்தும் விவசாயிகளின் பிரச்னை குறித்தும், ‘உழவர் களத்தில் ஒரு நாள்’ என்று தொடர் நேரலையாக இன்று நாள் முழுவதும் செய்தி வெளியிடுகிறது புதிய தலைமுறை. உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யலாம்.
கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் சாகுபடிபரப்பு குறைந்து கொண்டே வருகிறது. விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வேறு வேலைகளை நோக்கி தள்ளப்பட்டு வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் பதிவாகும் தொடர் மரணங்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
இந்த வருடமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் கருகியிருக்கின்றன. ஒரு ஏக்கருக்கு ஒரு படி நெல் கூட கிடைக்காத நிலையில் விவசாயிகள் தவிக்கின்றனர். இந்த நிலை நெல் சாகுபடிக்கு மட்டுமல்ல. இந்த ஆண்டு சராசரி அளவை விட 62 சதவீததிற்கும் குறைவாக மழை பெய்திருப்பதால் கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களும் கருகி வருகின்றன.
இந்நிலையில் விவசாயிகளின் தொடர் மரணங்கள் குறித்து உடனுக்குடன் பதிவு செய்து வருகிறது புதிய தலைமுறை. இதன் மேலும் ஒரு முயற்சியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகளின் நிலை குறித்தும் அவர்களின் பிரச்னைகள் குறித்தும் இன்று ஒரு நாள் முழுவதும் தொடர் நேரலையாக செய்திகளை பதிவு செய்கிறது புதிய தலைமுறை.
உழவர்கள் பிரச்னை குறித்த உங்கள் கருத்துகளும் இடம் பெறும். உங்கள் கருத்துகளை #StandWithFarmers என்ற ஹேஷ்டேக்குடன் புதிய தலைமுறையின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுங்கள். ஆட்சியாளர்களின் கவனம் மட்டுமல்ல அனைவரின் கவனமும் உழவர் பிரச்னைகள் மீது திரும்ப வேண்டிய இக்கட்டான தருணம் இது..