தமிழக வீரர்கள் உடலுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி வந்து சேர்ந்தன. அவர்கள் உடலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார்.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்றுமுன் தினம் 78 வாகனங்களில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பயணம் செய்தனர். புல்வாமா மாவட்டத்தில் அவர்கள் வாகனம் வந்தபோது, தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் உட்பட 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு செயல்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் மக்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் அரியலூர் கார்குடியை சேர்ந்த சிவச்சந்திரன், கயத்தாறு சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் உடல்கள் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தன. டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர்கள் உடல்கள் திருச்சி வந்து சேர்ந்தன. அங்கிருந்து சுப்பிரமணியன் உடல் மதுரைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.
சிவச்சந்திரன் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார். முப்படை அதிகாரிகள் வீரவணக்கம் செலுத்தினர். அடுத்து காவல் துறையினர் வீரவணக்கம் செலுத்தினர். வீரர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்று ம் ஏராளமான பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.