புதுக்கோட்டை: குளத்தில் குளிக்கச் சென்ற இருவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் குளத்தில் குளிக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பெரியார் நகரைச் சேர்ந்த சுந்தரம், அண்ணாநகரைச் சேர்ந்த குமாரவேல் ஆகிய இருவரும் இன்று மாலை அங்குள்ள முத்துமாரியம்மன் கோயில் குளத்தில் குளித்துவிட்டு கோயில் படிக்கட்டு அருகே இருந்த கம்பி வேலியில் துணிகளை காயப் போட்டுள்ளனர்.
அப்போது அந்த கம்பியின் அருகே மின் விளக்கில் தொங்கிக் கொண்டிருந்த வயரில் கசிவு இருந்ததால் இருவரும் துணிகளை காயப்போட்ட போது கம்பி வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனையடுத்து இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

