\
தனியார் பள்ளிகளின் தாக்கம் - மாணவர்களே இல்லாத அரசுப் பள்ளி!

தனியார் பள்ளிகளின் தாக்கம் - மாணவர்களே இல்லாத அரசுப் பள்ளி!

தனியார் பள்ளிகளின் தாக்கம் - மாணவர்களே இல்லாத அரசுப் பள்ளி!
Published on

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வாழைக்கொல்லையில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில் அரசு தொடக்கப்பள்ளி இயங்குவதால், பள்ளியை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆலங்குடி அருகேயுள்ள வாழைக்கொல்லையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மாணவர்கள் படிப்பிற்காக ஆலங்குடி, கீழப்பட்டி ராசியமங்கலம் மற்றும் மழையூரில் உள்ள பள்ளிகளுக்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியிருந்தது. 

இதனால், அப்பகுதியில் தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, வாழைக்கொல்லையில் அரசு தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் வாழைக்கொல்லை, முருங்கக்கொல்லை, மேட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் படித்து வந்தனர். வாழைக்கொல்லையைப் போலவே முருங்கக்கொல்லை மக்களும் தங்கள் பகுதியில் அரசுப் பள்ளி அமைக்க வேண்டும் என்று நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் எதிரொலியாக புதிய பள்ளி கட்டப்பட்டு, கடந்த 1-ம் தேதி திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  

கோடை விடுமுறைகள் முடிந்த பின்னர், அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் படிக்கத்தொடங்கினர். ஆனால் வாழைக்கொல்லை பள்ளிக்கு மட்டும் மாணவர்கள் வரவில்லை. இதனால், ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பள்ளி தொடங்கப்பட்டு 2 நாட்களாகியும் மாணவ, மாணவிகள் யாரும் வரவில்லை. இதுகுறித்து ஆசிரியர்கள் வாழைக்கொல்லை பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது, முருங்கக்கொல்லை பகுதியில் புதிதாக பள்ளி திறக்கப்பட்டதால், அந்த ஊர் மாணவர்கள் வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து வாழைக்கொல்லை பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை பள்ளிக்கு வருமாறு ஆசியர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அந்தப் பகுதியில் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆலங்குடி, கே.ராசியமங்கலத்தில் உள்ள தனியார் ஆங்கில பள்ளியில் படிப்பதாக கூறியுள்ளனர். இந்தப் பள்ளி மட்டுமின்றி அந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ள சில பள்ளிகளிலும் இதே நிலை ஏற்பட்டு வருவகிறது. இதனால் வாழைக்கொல்லை அரசுப்பள்ளி மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

(தகவல்கள் : முத்து பழம்பதி, செய்தியாளர், புதுக்கோட்டை)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com