புதுக்கோட்டை: கொரோனா காலத்தை பயன்படுத்தி 4 மொழிகள் கற்றுத் தேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி
கொரோனா ஊரடங்கு விடுமுறையை பயன்படுத்தி 9 மாத காலத்திற்குள் நான்கு மொழிகளை பேசவும் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்ட பத்தாம் வகுப்பு மாணவி, பெயிண்டிங் டிராயிங், ரிவர்ஸ் ட்ராயிங் என ஆசிரியரின் பயிற்சியின்றி இணையத்தின் உதவியோடு கலக்கி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நகரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேதுராமன் மகேஸ்வரி தம்பதியினருக்கு, நான்கு மகள்கள் உள்ளனர், குடும்ப சூழ்நிலை காரணமாகவும், மகள்களை நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு ஆளாக்க வேண்டும் என்பதால் சேதுராமன் வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்து வருகிறார்.
இதையடுத்து அவரது நான்கு மகள்களும் நன்றாக படித்து வரக்கூடிய சூழ்நிலையில் அவரது இரண்டாவது மகள் சுபபாரதி அதே பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வமாக உள்ள சுபபாரதி பள்ளி ஓவிய ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளும் பதக்கங்களும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால் பள்ளிகள் திறக்காத நிலையில் கடந்த ஒன்பது மாத காலமாக சுபபாரதி வீட்டில் இருந்தபடியே தனக்கு விருப்பமான ஓவியத்தை இணையதளத்தில் பார்த்து, எளிதில் யாரும் வரையமுடியாது 3டி பெயிண்டிங,; டிராயிங், ரிவர்ஸ் டிராயிங் உள்ளிட்டவற்றை தத்ரூபமாக வரைந்து சாதித்து காட்டியுள்ளார்.
அதோடு தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்கு எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்த சுபபாரதி, அவரின் தாயார் உதவியுடன் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளை குறைந்த நாட்களில் எழுதவும் படிக்கவும் பேசவும் கற்று தற்போது ஆறு மொழிகளையும் சரளமாக பேசி பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார் சுபபாரதி.