“காதலியை எரித்துக் கொன்று விட்டார்கள்”: காவல்நிலையத்தில் காதலன் புகார்
புதுக்கோட்டை அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது காதலியை பெண்வீட்டார் ஆணவகொலை செய்து எரித்து விட்டதாக கூறி காதலன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் விவேக் (20). பெயிண்டராக உள்ளார். இந்நிலையில், விவேக்கும் திருவரங்குளம் அருகே உள்ள இடையன்வயலைச் சேர்ந்த நாகேஸ்வரன் (கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்) என்பவரது மகள் சாவித்திரியும்(19) கடந்த 8 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகின்றது. புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் சாவித்திரியும் விவேக்கும் திருவரங்குளம் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் விவேக்கும், சாவித்திரியும் இருவரது வீட்டுக்கும் தெரியாமல் காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களது காதல் விவகாரம் சாவித்திரியின் வீட்டுக்கு தெரிந்ததால் அவரது தாயார் மற்றும் அவரது உறவினர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் சாவித்திரிக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ஒரு மாப்பிள்ளையை பார்த்து பேசி முடித்ததாக கூறப்படுகின்றது. இது பிடிக்காத சாவித்திரி விவேக்கிடம் அலைப்பேசியில் தொடர்புகொண்டு தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்றும் தன்னை உடனடியாக அழைத்துச் செல்லுமாறு கூறியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து விவேக்கும் சாவித்திரியும் கோயம்புத்தூருக்கு செல்ல திட்டமிட்டு ஒரு வாடகை காரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரது வீட்டிற்கு தெரியாமல் புதுக்கோட்டையிலிருந்து கோயம்புத்தூருக்கு புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோயம்புத்தூர் செல்லும் வழியில் குளித்தலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது விவேக்கும் சாவித்திரியும் சென்ற காரை நிறுத்தி விசாரித்துள்ளனர். இதனையடுத்து சாவித்திரியும் விவேக்கும் போலீசாரிடம் தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார் இருவரது வீட்டிலும் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குளித்தலை காவல் நிலையத்திற்கு வரும்படி கூறி உள்ளனர்.
hi
இந்நிலையில், கடந்த 8ம் தேதி விவேக் மற்றும் சாவித்திரியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குளித்தலை மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் விவேக்கிற்கு 21 வயது முழுமையாக நிறைவடையாததால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் அதனால் சாவித்திரி பெற்றோரிடம் போகும்படி கூறி உள்ளனர். ஆனால், அதற்கு சாவித்திரி மறுப்பு தெரிவித்ததாகவும் தன்னை காப்பகத்திற்கு அனுப்பும் படி கூறியதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து போலீசார் விவேக்கிற்கு இன்னும் நான்கு மாதங்களில் திருமண வயதை எட்டி விடுவார் அதுவரை சாவித்திரியை எந்த ஒரு துன்புறுத்தலும் செய்யக்கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டு சாவித்திரியை அவரது பெற்றோரிடம் காவல்துறையினர் அனுப்பியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து சாவித்திரி மற்றும் விவேக்கின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடந்த 9ஆம் தேதி புதுக்கோட்டைக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி சாவித்திரிக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார் இடையவயலில் உள்ள சாவித்திரி வீட்டிற்கு வந்து அவரது பெற்றோரிடம் உங்கள் சம்பந்தம் வேண்டாம் என்று கூறி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை விவேக்கின் உறவினர்களுக்கு இடையன்வயல் பகுதியிலிருந்து சாவித்திரி உயிரிழந்து விட்டதாகவும் இரவோடு இரவாக சாவித்திரியின் உறவினர்கள் உடலை எரித்து இறுதி சடங்குகளை முடித்து விட்டதாகவும் தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து விவேக்கின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தோடு இணைந்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் ஒன்றினை கொடுத்துள்ளனர். அந்த மனுவில், சாவித்திரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் காதலரை விட்டு பிரித்து கூட்டி வந்து ஆணவ கொலை செய்துவிட்டு யாருக்கும் தகவல் சொல்லாமல் எரித்து விட்டதாகவும் இதை சாதாரண வழக்காக பார்க்காமல் ஆணவ கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் புகாரை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதாகவும் வழக்கில் உண்மை தன்மைக்கேற்ப விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இதனிடையே இன்று சாவித்திரியின் மரணத்தில் உள்ள தடயங்கள் மற்றும் சடலத்தை அவரது பெற்றோர் வருவாய்த் துறையினருக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக திருவரங்குளம் கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா அளித்த புகாரின் பேரில் உயிரிழந்த சாவித்திரியின் தாயார் சாந்தி பெரியம்மா விஜயா மாமா முருகேசன் பெரியப்பா நடேசன், முருகேசன் தாய்மாமன் சிதம்பரம் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.