புதுக்கோட்டை: காவலர்களின் மன அழுத்தத்தை போக்க எஸ்.பி. எடுத்த அதிரடி முடிவு... உற்சாகமடைந்த போலீசார்!

புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்டோரின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்கள் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க ஏற்பாடு செய்துள்ளார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
புதுக்கோட்டை காவலர்களுடன் எஸ்.பி வந்திதா பாண்டே
புதுக்கோட்டை காவலர்களுடன் எஸ்.பி வந்திதா பாண்டேபுதிய தலைமுறை

இன்றைய சூழலில் நேர வரம்பின்றி பணியாற்றும் முதன்மையான துறையாக இருக்கிறது காவல்துறை. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார் மனுக்களுக்கு தீர்வு காண்பது, குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைப்பது, போக்குவரத்தை சரி செய்வது உள்ளிட்ட பல பணிகளில் காவலர்களும் காவல்துறை அதிகாரிகளும் நேரம் காலம் பார்க்காமல் தொடர்ந்து பணியில் ஈடுபடுவதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

police family
police familypt desk

இதனால் காவலர்கள் தங்களது குடும்பத்தினரோடு நேரத்தை செலவிட முடியாததோடு மன ரீதியில் கூடுதல் பாதிப்பிற்கும் உள்ளாகின்றனர். இதையெல்லாம் கருத்தில்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்களின் மன அழுத்தத்தை போக்கவும், குடும்பத்தினரோடு அவர்கள் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஒரு ஏற்பாடு செய்துள்ளார்.

எஸ்.பி வந்திதா பாண்டே
எஸ்.பி வந்திதா பாண்டே

அதன்படி மாவட்டத்திலுள்ள காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு விடுப்பு அளித்து அவர்களை குடும்பத்தினருடன் புதுக்கோட்டை அய்யனார் திடலில் நடைபெறும் சர்க்கஸ் நிகழ்வை கண்டுகளிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார் எஸ்.பி வந்திதா பாண்டே.

இதற்கான கட்டணத்தையும் மாவட்ட காவல்துறையே செலுத்தும் எனவும் எஸ்பி அறிவித்திருந்ததால் உற்சாகமடைந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 200-க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் சர்க்கஸ் அரங்கிற்கு சென்று மகிழ்ச்சியோடு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். பணிச்சுமையின் காரணமாக குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் தாங்கள் இது போன்ற நிகழ்வுகளுக்கு நீண்ட காலமாக செல்ல முடியாமல் இருந்த சூழலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த அறிவிப்பு தங்களுக்கு உதவியாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

circus
circuspt desk

இதுபற்றி காவலர்கள் நம்மிடையே பேசுகையில், “நாங்களெல்லாம் மாதத்தில் ஒருமுறை இதுபோன்ற சர்க்கஸூக்கோ, பூங்காவுக்கோ திரைப்படத்துக்கோ செல்வதே கடினம். அந்த அளவிற்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் இதைப் பற்றி நினைக்கக் கூட நேரம் இல்லாத சூழல் இருந்தது. அப்படியிருக்க, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எங்களின் நிலையை அறிந்து சிறப்பு அனுமதி அளித்து அனைவரையும் சர்க்கஸ் நிகழ்விற்கு அனுப்பி வைத்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலத்திற்கு பின் எங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டதோடு சக காவல்துறை நண்பர்களோடு அமர்ந்து சர்க்கஸ் பார்த்தது இன்னும் சந்தோஷம்.

மாதத்திற்கு ஒருமுறை இதுபோன்ற வாய்ப்பு கிடைத்தால் எங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவோம். மன உளைச்சல் இன்றி சிறப்பாக பணியாற்றுவோம்” என்று தெரிவித்தனர். இவர்களோடு அமர்ந்து எஸ்.பி வந்திதா பாண்டேவும் நிகழ்வை கண்டுகளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com