புதுக்கோட்டை: இணைய உதவியுடன் வீட்டிலேயே பிரசவம்.. குழந்தை இறந்ததால் எரித்த கொடூரம்!
செய்தியாளர் முத்துப்பழம்பதி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெரிய செங்கீரை கிராமத்தில் அபிராமி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அபிராமி - ராஜசேகர் தம்பதியினருக்கு ஏற்கனவே பிறந்த குழந்தை மூன்று மாதத்தில் இறந்துவிட்டதால், அத்தம்பதிக்கு அலோபதி மருத்துவத்தின் மீது நம்பிக்கை போயுள்ளது. இதனால் இரண்டாவது குழந்தைக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட வட்டார மருத்துவ அலுவலர், ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு அபிராமி கர்ப்பம் தரித்ததை மறைத்து அவரது குடும்பத்தினர் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர்.
இதன் காரணமாக பிறந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை உயிரிழந்தது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு குழந்தையின் தாயார் அபிராமியை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அபிராமி மற்றும் ராஜசேகர் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், மாமியாரும், கணவரும் சேர்ந்து இணையத்தைப் பார்த்து அபிராமிக்கு பிரசவம் பார்த்ததுள்ளது தெரியவந்தது. மேலும், குழந்தை பிறந்த பின் சில மணி நேரங்களிலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்தது.