’’1.4% பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ - புதுக்கோட்டை மருத்துவ குழு
கிராமப்புற பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றும், தற்போதைய காலகட்டத்தில் 1.4 சதவீதம் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஆரம்ப காலகட்டத்திலேயே மருத்துவர்களை அணுகினால் மார்பகப் புற்று நோயில் இருந்து பெண்கள் தங்களை காத்துக் கொள்ளலாம் என்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார அமைப்பு கடந்த 2015ஆம் ஆண்டு அறிவித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு, ’பிங்க் அக்டோபர்’ என்ற பெயரில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது அறுவைசிகிச்சை துறையின் சார்பில், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும், பெண்கள் அதிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் ஐந்து நாட்களுக்கு இந்த மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமினை மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி இன்று தொடங்கி வைத்தார். இதில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் பாதிப்புகள், தற்காப்பு முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அப்போது இதுகுறித்து பொது அறுவை சிகிச்சைத்துறை மருத்துவ குழுவினர் கூறுகையில், உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 10.5 சதவீதம் மார்பக புற்று நோயாக உள்ளது என்றும், 1.4 சதவீதம் பெண்கள் மார்பக புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும், நகர்ப்புறங்களில் பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் கிராமப்புறங்களில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றும், அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.
மேலும் அவர்கள் கூறுகையில், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவருமே வருடத்திற்கு ஒருமுறை தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், ஆரம்ப காலகட்டத்திலேயே இந்நோய் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எளிது என்றும், கிராமப்புற பெண்களும் எந்தவித தயக்கமுமின்றி அரசு மருத்துவமனைக்கு வந்து தங்களை சுயபரிசோதனை செய்துகொண்டால் அவர்களுக்கு தேவையின் அடிப்படையில் மேமோகிராம், ஸ்கேன், சிசு புளித்த பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் இதனை பெண்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ குழுவினர் கூறினர்.