புதுக்கோட்டை: களைகட்டும் கலாசார மொய் விருந்து... கோடிகள் குவியுமா?

புதுக்கோட்டை: களைகட்டும் கலாசார மொய் விருந்து... கோடிகள் குவியுமா?
புதுக்கோட்டை: களைகட்டும் கலாசார மொய் விருந்து... கோடிகள் குவியுமா?

புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் கலாசாரம் சார்ந்த விழாவாக கருதப்படும் கோடிகள் குவியும் மொய் விருந்து விழா தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு தொடங்கியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக முதன் முதலில் தொடங்கப்பட்டதுதான் இந்த மொய்விருந்து விழாக்கள். அது மெல்ல மெல்ல வளர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவி தற்போது இந்த மொய் விருந்து விழாக்கள் இந்த பகுதி மக்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாழ்வாதாரமாகவும் மாறிப்போனது.

வழக்கமாக புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் ஆடி மற்றும் ஆவணி மாதம் நடைபெறும் மொய் விருந்து விழாக்கள், இந்த ஆண்டு கொரோனா ஏற்படுத்திய பாதிப்பாலும் தொடர் பொது முடக்கத்தாலும், ஐந்து மாதங்களைக் கடந்து தற்போது களைகட்ட தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் தற்போது தொடங்கியுள்ள மொய் விருந்து விழா அதனை சுற்றியுள்ள பகுதிகளான அணவயல், கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, சேந்தன்குடி, குளமங்கலம் என தொடர்ந்து அடுத்தடுத்த ஊர்களில் அடுத்தடுத்த நாட்கள் மற்றும் தை மாதங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு 500 கோடி வரையில் மொய் பணம் வசூல் ஆன நிலையில் இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புகளால் அப்பகுதி மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் வசூலாகும் மொய் தொகையின் விகிதாச்சாரம் குறையும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். எனினும் தற்போது கொத்தமங்கலம் பகுதியில் மொய் விருந்து விழாக்கள் களைகட்டத் தொடங்கி உள்ளதால் வீடுகள் தோறும் மொய் விருந்து அழைப்பிதழ்கள் குவிய தொடங்கியுள்ளன. அதேபோல் அனைத்து ஊர்களிலும் மொய் விருந்து பேனர்கள் பளபளக்க தொடங்கிவிட்டன.

மொய் விருந்து விழாவிற்கு வருபவர்களை விழா நடத்துபவர்கள் அன்போடு மாலை அணிவித்து வரவேற்பதோடு அவர்களுக்கு ஆட்டுக் கறி விருந்தும் பரிமாறப்படுகிறது. அதேவேளையில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு முகக் கவசங்கள் அணிந்தும், விழாவிற்கு வருபவர்களுக்கு சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தும் விழாக்கள் நடத்தப்படுகிறது.


இந்த மொய் விருந்து விழாக்கள் மூலம் ஆடு வியாபாரிகள், மண்டபம், மளிகைக் கடை உரிமையாளர்கள், பத்திரிகை மற்றும் பிளக்ஸ் பேனர் அச்சக தொழிலில் உள்ளவர்கள், வாழை இலை வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு நல்ல வருமானம் கிடைப்பதோடு பல கோடி மதிப்பிலான வர்த்தகமும் நடைபெற தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி மொய் எழுதுபவர்கள் சமையல் தொழில் ஈடுபட்டுள்ளோர், உணவு பரிமாறுபவர்கள் என பல ஆயிரம் பேருக்கு வரும் இரண்டு மாதங்கள் தொடர்ந்து வேலை வாய்ப்புகளும் கிடைக்கின்றன.


இந்த மொய் விருந்து விழாக்களை 10 பேர் முதல் 32 பேர் வரை இணைந்து ஒரே விழாவாக நடத்துவதால் உணவு உள்ளிட்ட செலவுகளை அனைவரும் இணைந்து பகிர்ந்து கொள்கின்றனர். இதனால் மொய் விருந்து நடத்துபவர்களுக்கு செலவுத்தொகை குறைகிறது. கடந்த ஆண்டைப் போல் மொய் விருந்தில் தொகை கிடைக்காவிட்டாலும் 250 கோடி முதல் 400 கோடி வரையில் இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com