புதுச்சேரியில் ஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது.
ஐந்தாவது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது இதில் சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள், தொழிலதிபர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு நாளை வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள தொழில் முனைவோர், வர்த்தகத்துறையினர், தொழில் வளர்ச்சிகாக வங்கிகள், நிதிநிறுவனங்கள், நிதியுதவி செய்யும் அமைப்புகள் மூலம் நிதியுதவி பெற வாய்ப்புகள் செய்து தரப்படுகின்றது.
மேலும் இந்த மாநாட்டில் நடைபெறும் 15 அமர்வுகளில் பொருளாதார வளர்ச்சியை எட்ட பல்வேறு நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த 18 சிறப்பு ஆய்வுகள், விருப்ப தொழில்கள் புரிய வாய்ப்புகளை வகுத்தளித்தல் இம்மாநாட்டின் முக்கிய அம்சமாக இருக்கின்றது. இந்த மாநாட்டில் மொரிசியஸ் நாட்டின் குடியரசு துணைத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
(பரமசிவம் பிள்ளை வையாபுரி)
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மொரிசியஸ் நாட்டு குடியரசுத் துணைத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி செய்தி யாளர்களிடம் பேசும்போது, இந்தியாவுக்கும் மொரிசியஸ் நாட்டிற்கும் 200 ஆண்டுகால தொடர்பு உண்டு எனவும் கரும்பு வெட்டும் தொழிலுக்காக தமிழகத்தில் இருந்து ஆதி தமிழர்கள் பலர் மொரிசியசில் குடியேறி பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் மொரிசியஸ் நாட்டின் உட்கட்டமைப்புக்கு இந்தியா அதிக நிதி ஒதுக்கி ஒத்துழைப்பு தந்து வருவதாகவும் மொரிசியஸ் நாட்டுடன் இந்திய நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாக தெரிவித் தார். மேலும் இளைய தலைமுறையினருக்கு தமிழர்களின் கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்வதற்கு இத்தகைய மாநாடு பயனுள்ளதாக அமையும் என கூறினார்.
கயானா பிரதம அமைச்சர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, உலகமெங்கும் உள்ள முதலீட்டாளர்களுக்கும் தங்கள் நாட்டினருக் கும் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்த இந்த மாநாடு ஏதுவாக இருக்கும் எனவும் புதிதாக ஆயில் கேஸ் தொழிலை கயானாவில் தொடங்க இருக்கிறோம். எங்களது புதிய தொழிலை மேம்படுத்த இந்த மாநாடு பயனளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.