பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை: ஒரே ஸ்டைலில் 2-வது கொலை!
புதுச்சேரியில் பிரபல ரவுடி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். ஒரே வாரத்தில் இரு ரவுடிகள் ஒரே முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி அன்பு ரஜினி. இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அன்பு ரஜினி நேற்று இரவு வீட்டில் இருந்து தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல், கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. உயிரை காப்பாற்றுவதற்காக காரிலிருந்து அன்பு ரஜினி ஓட முயன்றார். அவரை வழிமறித்த அந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டி சாய்த்தது. பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்து உயிரிழந்தார்.
முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக அன்பு ரஜினி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த ஆறாம் தேதி அரியாங்குப்பம் பகுதியில் பாண்டியன் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார்.
ரவுடிகளுக்கு இடையேயான முன்விரோதம், தொழில்போட்டி மற்றும் மாமூல் வசூலிப்பதில் தகராறு உள்ளிட்ட காரணங்களால் ஆயுதங்களுடன் கொலை செய்யப்படும் சம்பவங்கள் புதுவையில் சமீபத்தில் அதிகமாக அரங்கேறி வருகின்றன.