புதுச்சேரி: வாய்க்கால் தூர்வாரும்போது இடிந்த மதில் சுவர்; 5 தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு

புதுச்சேரியில் வாய்க்கால் தூர்வாரும்போது மதில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடிந்த சுவர்
இடிந்த சுவர்pt web

புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமானுஜம் நகர் முதல் வசந்தம் நகர் வரை மூன்றரை கோடி ரூபாய் மதிப்பில் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் 10 அடி கொண்ட மதில் சுவர் இடிந்து ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் குணசேகரன், பாலமுருகன், ஸ்ரீனிவாசன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர். அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கமல்ஹாசன், ராஜேஷ்கண்ணன் என்ற இருவர் உயிரிழந்தனர்.

இதனிடையே, படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ள தொழிலாளர்களை துணை நிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் தனது இரங்கலை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுபோன்ற அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இந்த விபத்து குறித்து முதலியார்பேட்டை காவல்துறையினர், ஒப்பந்ததாரர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவனக்குறைவாக செயல்பட்டு மரணம் விளைவித்தது, அலட்சியமாக பாதுகாப்பு இன்றி செயல்பட்டது என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரியின் நகரப்பகுதியில் ஆட்டுப்பட்டி அருகே வாய்க்கால் பக்கவாட்டு சுவர் அமைக்க தூர்வாரிய போது 3 மாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. தற்போது கால்வாய் தூர்வாரும் போது சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இனி இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை ஆகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com