சிஏஏ-வுக்கு எதிராக பேரவையில் விவாதிக்கக்கூடாது - புதுச்சேரி முதல்வருக்கு ஆளுநர் கடிதம்
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் விவாதிக்கக்கூடாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்றக் கூட்டம் வருகிற 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக விவாதிக்கக்கூடாது என ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், வரும் 12ஆம் தேதி கூடவுள்ள சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில், குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக பாஜக எம்.எல்.ஏக்கள் தன்னை சந்தித்து புகார் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘குடியுரிமை சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டம் புதுச்சேரி மாநிலத்திற்கும் பொருந்தும். அத்துடன் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது’ எனவும் கிரண்பேடி அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புதுச்சேரியில் வரும் 12ஆம் தேதி கூடவுள்ள சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் அரசு கொண்டுவர உள்ள தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என்பதை வலியுறுத்தி, புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து மனு அளித்தனர். இதுதொடர்பாக சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவை செயலாளரிடமும் அவர்கள் மனு அளித்திருந்தனர்.