பாலியல் புகார் : மாணவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பேராசிரியருக்கு அபராதம்
புதுச்சேரியில் மாணவிக்கு மாற்று சான்றிதழ் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த பேராசிரியருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது.
புதுச்சேரியில் உள்ள பண்டிதர் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் குமாரவேல். இவர் மீது அக்கல்லூரியில் முதலாமாண்டு படித்த மாணவி ஒருவர், பாலியல் தொல்லை புகார் கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம், குமாரவேலை தற்காலிக பணி நீக்கம் செய்தது. பின்னர் அந்தக் கல்லூரியில் படிக்க வேண்டாம் என முடிவெடுத்த மாணவியின் தந்தை, தனது மகளுக்கு மாற்றுச்சான்றிதழ் கோரி கல்லூரியில் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் மாணவிக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கக்கூடாது என பேராசிரியர் குமாரவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மாணவிக்கு மாற்றுச் சான்று வழங்கினால், தனக்கு எதிரான விசாரணை மேலும் தாமதமாகும் என குறிப்பிட்டுளார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் பேராசிரியரின் மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவருக்கு ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.