பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதி சான்றுகள் புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு ஆகிய ஆவணங்களின் செல்லுபடி கால அளவினை டிசம்பர் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக, பொது போக்குவரத்திற்கான இந்த சான்றிதழ்கள் செல்லுபடியாகும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அக்டோபர் 31ம் தேதி வரை இந்த கால அளவை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும், மேற்கு வங்கம் மற்றும் டெல்லி மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு ஆவணங்கள் செல்லுபடியாகும் காலத்தை முறையே டிசம்பர் 31 மற்றும் நவம்பர் 30 வரை நீட்டிப்பு செய்து அவகாசம் வழங்கியது போல், தமிழகத்திலும் பொது போக்குவரத்து வாகனங்களின் ஆவணங்கள் செல்லுபடியாகும் கால அளவினை டிசம்பர் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தருமாறு தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
அந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொண்டும், பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நலன் கருதியும், வாகனத்தின் அனைத்து ஆவணங்களின் தகுதி சான்று புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு செல்லுபடியாகும் கால அளவினை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவே கடைசி நீட்டிப்பு வழங்கலாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆணையிடப்படுவதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.