சின்னாபின்னமாக சிதறிப்போன காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலை: சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

சின்னாபின்னமாக சிதறிப்போன காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலை: சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை
சின்னாபின்னமாக சிதறிப்போன காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலை: சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலை குண்டும் குழியுமாக மாறி படுமோசமாக உள்ளதால், சாலையை பயன்படுத்த முடியாமல், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் காஞ்சிபுரம் - வாலாஜாபாத் பிரதான சாலை முற்றிலும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உருமாறி மண் புழுதி பறக்கும் சாலையாக பரிதாப நிலைக்கு மாறிவிட்டது. குறிப்பாக கல்குவாரி லாரிகளால் அதிக அளவில் சிதிலமடைந்துள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் வரை சுமார் 15 கி.மீ. தூரம் கொண்ட இந்த சாலையைத்தான், நத்தப்பேட்டை, அய்யம்பேட்டை, ராஜம்பேட்டை நாயக்கன்பேட்டை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வசிக்கும் மாணவர்கள், விவசாயிகள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் பயன்படுத்த வேண்டும். ஆனால், மணிமங்கலம், படப்பை வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் இயங்கும் குவாரிகளில் இருந்து அதிக லோடுகள் ஏற்றிச்செல்லும் லாரிகளாலும், கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கனமழை காரணமாகவும் இந்த சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது.

செங்கல்பட்டுக்கு அவசர நோயாளிகளை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸ்கள் இந்த வழியேதான் செல்லவேண்டும் என்பதால் சின்னாபின்னமாக சிதறி கிடக்கும் இந்த சாலையில் ஊர்ந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த பிரதான சாலை வழியே பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான தனியார் பேருந்துகளும் செல்கின்றன. இதனால் அப்பகுதியில் அவ்வப்போது விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, இச்சாலையின் முக்கியத்துவத்தை கருதி பள்ளங்களை சரிசெய்து தரமான தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com