'பப்ஜி' மதனின் வங்கிக் கணக்கு முடக்கம்: மனைவி கிருத்திகா வங்கிக்கணக்கில் ரூ.4 கோடி இருப்பு

'பப்ஜி' மதனின் வங்கிக் கணக்கு முடக்கம்: மனைவி கிருத்திகா வங்கிக்கணக்கில் ரூ.4 கோடி இருப்பு
'பப்ஜி' மதனின் வங்கிக் கணக்கு முடக்கம்: மனைவி கிருத்திகா வங்கிக்கணக்கில் ரூ.4 கோடி இருப்பு

ஆபாசமாக பேசி பல கோடி ரூபாயை சம்பாதித்த 'பப்ஜி' மதன் மற்றும் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. யூ டியூப்பில் ஆபாசமாக பேசி மதனும் அவரது மனைவியும் சம்பாதித்த ரூ.4 கோடி வங்கிக் கணக்கில் உள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட வழக்கில் அட்மினாக செயல்பட்ட மதனின் மனைவி கிருத்திகாவை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள மதனை கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர். மதனின் தந்தை மாணிக்கத்திடம் நேற்று 2-வது நாளாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல தகவல்களை சைபர் கிரைம் போலீசார் சேகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூடியூப்பில் ஒளிபரப்புவதன் மூலம் மாதந்தோறும் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்ததாகவும், 3 சொகுசு கார்கள், 2 சொகுசு பங்களாவை வாங்கியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அம்பத்தூரில் 'ஆடம்பரமான ஹீரோ' என்ற பெயரில் அசைவ உணவகம் நடத்தி, பின்னர் உரிமையாளருக்கு வாடகை தராமல் மோசடி செய்து பப்ஜி மதன் தப்பியோடியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு கள்ளிக்குப்பத்தில் ஒரு வருடமாக வாடகை எடுத்து ஹோட்டலை மதன் நடத்தி வந்துள்ளார். இதைக் காட்டி வங்கிகளிடம் 5 லட்சம் ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி மதன் மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஹோட்டலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாடகை தராமல் உரிமையாளரை ஏமாற்றி தப்பியோடி உள்ளார். இதனால் உரிமையாளர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் மதன் மீது புகார் அளித்தார். அப்போதுதான் தெரிந்தது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால், கிருத்திகாவை அழைத்து கொண்டு மதன் தலைமறைவானது.

இதன் பிறகுதான் மதன் தனது அடையாளத்தை காட்டாமல் மனைவி கிருத்திகாவுடன் இணைந்து யூடியூப்பை தொடங்கி பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி லட்சங்களை குவித்து 'பப்ஜி மதனாக' மாறியுள்ளார். இது மட்டுமின்றி பப்ஜி மதன் வீடியோ பதிவேற்றம் செய்வதற்காக 3 சிம்கார்டுகளை பயன்படுத்தியுள்ளார். தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட விளையாட்டை விபிஎன் சர்வரை பயன்படுத்தி ஒளிபரப்பு செய்து வந்துள்ளார் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மதன் பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்டாப்பை போலீசார் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பினர். சிறுமிகளிடம் மதன் பணப்பறிப்பு செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்த விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேலும் 30 சதவிகித சிறுவர்கள் மதனின் யூடியூப் சேனலை பின்தொடர்வதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆதாரங்களை திரட்டும் பணியிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com