'கள் உணவல்ல விஷம்; கள் இறக்கும் நிகழ்வில் பங்கேற்ற சீமான் மீது நடவடிக்கை வேண்டும்!' - கிருஷ்ணசாமி!
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். கள் உணவல்ல அது விஷம் என்று கூறிய கிருஷ்ணசாமி, கள் இறக்கும் நிகழ்வில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைக் கடுமையாக விமர்சித்தார். தமிழ் இலக்கியங்களில் கூட கள் குடிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
சீமானை விமர்சித்த கிருஷ்ணசாமி..
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பெரியதாழை பகுதியில் பனைமரத்தில் ஏறி “கள் இறக்கி” குடித்ததையும், அதை ஒரு போராட்டமாகச் செய்ததையும் கடுமையாக எச்சரித்தார். “அவர் மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் கள்ளு குடிக்க வைத்தார். இது சட்ட விரோதமானது. காவல்துறையினர் இதைக் கண்டுகொள்ளாமல் கண்டு களித்தது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “கள் என்பது உணவல்ல, அது ஒரு விஷம். தமிழ் இலக்கியங்களில் கூட கள் குடிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது ஏழை மக்களை மேலும் அடிமையாக்கும் ஒரு கருவி” என்று தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சி தொடங்கிய நாள் முதல் பூரண மதுவிலக்கையே முக்கியக் கொள்கையாக கொண்டிருப்பதாகவும், 2023-ல் ஆளுநர் மாளிகை நோக்கி மதுவிலக்கு பேரணி நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
சீமனை கைது செய்யவேண்டும்..
சீமான் போன்றவர்கள் “தமிழ் தேசியம்” பேசிக்கொண்டே கள்ளை ஊக்குவிப்பது ஆபத்தானது என்றும், இது ஈழத் தமிழர்களிடமிருந்து வருகிற நன்கொடை பணத்தை தவறாக பயன்படுத்துவதைப் பறைசாற்றுவதாகவும் குற்றம்சாட்டிய அவர், தமிழ் தேசியம் பேசிக் கொண்டே சாராய அரசியல் செய்ய முயல்கிறார் சீமான். இது ஓர் அபாயகரமான முன்னுதாரணம். சீமான் திருந்த வேண்டும், இல்லையெனில் திருத்தப்படுவார் என எச்சரிக்கையாகவும் தெரிவித்தார்.
அதேபோல், ஜூன் 15ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற “கல் இறக்கும்” நிகழ்வில் பங்கேற்றவர்களையும் சீமானையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் வலியுறுத்தினார். “இந்த நாட்டு மக்கள் 70 ஆண்டுகளாக குடியிலிருந்து முன்னேற முயல்கின்றனர். இதுபோன்ற பித்தலாட்டக்காரர்கள் அவர்களை மீண்டும் கீழ்த்தட்ட மக்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இதை தமிழக மக்கள் புரிந்துகொண்டு எதிர்க்க வேண்டும்,” எனக் கூறினார்.
மாநில அளவில் போராட்டங்களை திட்டமிட்டு நடத்தியுள்ளதாகவும், எதிர்காலத்திலும் இதுபோன்று கள் மீது விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.