தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம் - தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக போராட்டம் நடைபெற்றது. மேலும் தொழிற்சங்கங்கள் அடங்கிய தமிழக மக்கள் மேடை சார்பிலும் சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இடதுசாரி கட்சிகள், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், திராவிடர் கழகம் ஆகியோர் தமிழக அரசு உடனடியாக பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிளாளர் சங்கம் சார்பில் பேருந்து நிலையம் அருகே ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த திருக்கடையூரில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் நெடுவாசல், தேனி, ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பல இடங்களில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, ஸ்டொ்லைட் ஆலை உரிமையாளா் அணில் அகா்வாலின் லண்டன் இல்லத்தை முற்றுகையிட்டு தமிழர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தின் போது அணில் அகர்வாலுக்கு எதிராகவும், ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராகவும் தமிழா்கள் முழக்கங்களை எழுப்பினா்.